சென்னை: திருவண்ணாமலை விமான நிலையம் கறிக்கோழி வளர்ப்பு, மின்சார பேருந்து சேவை குறித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை 2-வது நாளாக நேற்று முன்தினம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்து முடித்ததும் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அத்துடன் சட்டப்பேரவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டத்தொடர் நேற்று (ஜன.22) நடைபெற்றது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக இன்று சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
முன்னதாக இன்று காலை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
‘திருவண்ணாமலைpa;y விமான நிலையம் வேண்டும் என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் ஒரு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், நிதி ஆதாரத்தை பிச்சாண்டி ஏற்பாடு செய்தால் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்கப்படும் என்றார். மேலும், திருவண்ணாமலையில் விமான நிலையம் புரியாத புதிராக உள்ளது; முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
கறிக்கோழி வளர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. இதை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பரிந்துரைத்த காரணத்தால் சிறப்பு கவனம் ஈர்ப்பாக ஏற்கப்பட்டு விவாதம் நடைபெறுகிறது. கறிக்கோழி பிரச்னை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தினார். மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்ட அரசுக்கு கொங்கு ஈஸ்வரன் நன்றி தெரிவித்தார்.