சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் 6ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாள் அமர்வு நடைபெறுகிறது. இன்றை கேள்வி நேரத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் தெரிவித்துள்ளனர்.
புதிய ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்படுவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 373 ஊராட்சிகள் மட்டுமே மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக கருத்துகளை அளிக்க 120 நாட்கள் கால அவகாசம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என பதிலளித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மேலும், கூடுதலானோரை சேர்க்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கிராம சாலைகளில் பாலங்கள் குறித்த உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் ஸ்டாலின்குமார் கேள்விக்கு கேள்விகளுடக் கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, கிராம சாலைகளில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இன்னும் 67 பாலங்கள் கட்டப்பட வேண்டி உள்ளதாக கூறினார். மேலும், பேரம்பாக்கம் அருகே கூவம் ஆற்று தரைப்பாலத்திற்கு மாற்றாக மேல்தட்டுப்பாலம் கட்டப்படுமா என முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிதிநிலைக்கு ஏற்ப இந்தாண்டே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுப்பபடுமா என அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் மொத்தம் 17 அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. புதிய சட்டக் கல்லூரியை தொடங்க ரூ.120 கோடி வரை செலவு ஆகிறது. ஒரு சட்டக் கல்லூரி தொடங்கும் செலவுத் தொகையில் 10 முதல் 15 கலைக் கல்லூரிகளை தொடங்கலாம். காலச் சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் புதிய கல்லூரிகள் தொடங்க சாத்தியம் இல்லை என்று தெரிவித்தோம் என்றவர், “இந்தாண்டு முதலமைச்சரின் அனுமதி பெற்று வாய்ப்பிருந்தால் தென் மாவட்டங்களில் எங்காவது சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.