புதுடெல்லி: பணியிடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை களையும் வகையில் சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மாற்றங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்களின் குழுவானது வெளியில் அறிவிக்கப்படாமலேயே கலைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் சந்திப்புகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வினவப்பட்டபோது இது தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவின் செயல்பாடு தொடர்பாக எந்தவொரு விபரத்தையும் தெரிவிக்க முடியாது என்று அரசின் சார்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தகவல்களை தெரிவிப்பதானது, நாட்டின் இறையான்மைக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.
முந்தைய மோடி அரசில் மத்திய வெளியுறவு இணையமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் மீது பல பெண்கள் பாலியல் முறைகேட்டுப் புகார்களை அளித்த நிலையில், இந்தக் குழு அமைப்பது பற்றிய அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் மேனகா காந்தி ஆகிய 4 மூத்த அமைச்சர்கள். இவர்கள் மிக முக்கியப் பொறுப்புகளை வைத்திருந்தவர்கள்.