சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா இரு சக்கர வாகனத்திற்கான மானிய திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள ஜெ. பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு, இரு சக்கர வாகனத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மோடி வருகை குறித்து பாரதியஜனதாவினரும், அதிமுக சார்பிலும் பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில், நரேந்திர மோடிக்கு வரவேற்பு தெரிவித்து ஆங்கிலத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேனரில் மோடியின் படம் பெரியதாகவும், முதல்வர், துணை முதல்வர் படத்துடன் அமைச்சர் வேலுமணி படங்களும் இடம் பெற்றுள்ள நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம் பெறாமல் உள்ளது.

ஜெ.வின் பிறந்த நாளுக்கு வரும் பிரதமரின் வரவேற்பு பேனரில் ஜெயலலிதாவின் படம் இடம்பெறாதது அதிமுக தொண்டர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாநில அமைச்சரே இப்படி ஒரு பேனரை வைத்திருப்பது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.