சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் பதில் அளித்தனர்.

நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைய கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தாக்கல் செய்கிறார்.   முன்னதாக கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

வீராணம் ஏரி தூர்வாரப்படுமா என்று விசிக உறுப்பினர் சிந்தனைச்செல்வன்   எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், வீராணம் ஏரியில் தண்ணீர் வறண்டவுடன்  தூர்வாரப்படும் என  பதில் அளித்தார்.

பிச்சாண்டி எம்.எல்.ஏ. ஏரிகளுக்கு வேலி அமைக்க முடியுமா என எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். அப்போது, ஏரிகளுக்கு வேலி அமைப்பது இப்போது முடியாத காரியம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், குளங்களையும் ஏரிகளையும் தூர்வாருவதற்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. இதில் வேலி எங்கிருந்து அமைப்பது?  பொது இடத்தை ஆக்கிரமிப்பது ஒரு வியாதி; மக்கள் மத்தியில் அது வளர விடக்கூடாது. ஏரி மற்றும் குளங்களை ஆக்கரிமிப்பு செய்து வீடு கட்டினால் அதை இந்த அரசு ஏற்காது. அதனை அகற்றும் என்று கூறினார். மேலும்,  நீதிமன்ற ஆணைப்படி ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படும் நிலையில் ஏரிகளுக்கு வேலி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், ஸ்டாலின் முதல்வரான பிறகுதான் மழையோ மழை பெய்கிறது என்றார்.

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய உத்திரமேரூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் சுந்தர், வாலாஜாபாத் அருகே புதிய கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்றும்,   வாலாஜாபாத் சுற்றுப்புற பகுதிகளில் அதிகமான அரசு பள்ளிகள் இருக்கின்றன. இங்கிருந்து பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் வெளியே வருகிறார்கள். பெண் கல்வி திட்டத்தால் அதிகமான மாணவிகள் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்கிறார்கள். அவர்கள் தற்போது உத்திரமேரூர், சென்னை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. எனவே புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர் பொன்முடி,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில், வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். தொடர்ந்து பேசியவர், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 31 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். உத்திரமேரூர் தொகுதியில் மூன்று கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுப் புறங்களில் அதிகமான கல்லூரிகள் இயங்கி வருவதாலும் தற்போது புதிய கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லைஎனக் கூறினார். மேலும்  அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் பதிலளித்தார்.