புது டெல்லி:
அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, நாளை மறுதினத்துடன் (14ம் தேதி) முடிவுக்கு வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 7,529 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 242 பேர் பலியாகியுள்ளனர். இதனால் முடக்கத்தை நீட்டிப்பதா? வேண்டாமா என்பது குறித்து பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
முடக்கத்தை இம்மாதம் 30ம் தேதிவரை நீட்டிப்பதாக ஒடிசாவும், பஞ்சாப்பும் ஏற்கனவே அறிவித்து விட்டன. பிரதமருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, முடக்கத்தை இம்மாதம் இறுதி வரை நீட்டிப்பதாக மகாராஷ்டிராவும், மேற்கு வங்கமும், தெலங்கானாவும் அறிவித்தன. இதன் மூலம், இதுவரை 5 மாநிலங்கள் மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல் தாங்களாகவே முடக்கத்தை நீட்டித்துள்ளன. இதை பின்பற்றி மற்ற மாநிலங்களும் முடக்கத்தை தன்னிச்சையாக நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில், நோய் பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைளில் அரசு கவனம் செலுத்துவதாலும், முடக்கத்தால் முடங்கிய பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாலும், மத்திய அமைச்சர்கள், இணை செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் நாளை முதல் பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்களிலும் தேவையான ஊழியர்கள் 3ல் ஒரு பங்கு பேர் பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.