சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்க வில்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7000 ஐ கடந்தது.
இது குறித்து சென்னையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி 234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலே அவர்களுக்கு பரிசோதனைகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்கவில்லை.
இதுவரை 3,22,508 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.  மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில், எண்ணிக்கைகளை குறைக்காமல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் குறைவு. ஆகையால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.  உயிரிழப்பு விகிதம் 0.68 சதவீதம் தான் இருக்கிறது.  குணம் பெற்றோர் விகிதம் 37.46 சதவீதம், பாதிப்பு விகிதம் 60.49 சதவீதம் ஆகவும் உள்ளது என்றார்.