சென்னை
என்றுமே இந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உறையில்,
“அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்குப் போட்டி மொழி அல்ல. அலுவல் மொழியை ஏற்றுக கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும் ”
எனத் தெரிவித்திருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
“இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது.
தமிழகத்திற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியைத் தூக்கிப் பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை “Local Language” என்று சுருக்குவது எனும் பா.ஜ.க.வின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆக்ரோஷமாக வந்தாலும் – அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள், இனங்கள், மதங்கள் எனப் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையைத் திணிப்பதை பா.ஜ.க.வும், மத்திய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்”
என்று கூறியுள்ளார்.