சென்னை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணங்களில் எத்தனை ஆயிரம் கோடி முதலீடு வந்தது என அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது துபாயில் நடைபெறும் கண்காட்சியில் தமிழக அரங்கைத் திறந்து வைக்கத் துபாய் சென்றுள்ளார்.   அத்துடன் அவர் அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்துக்கு முதலீடுகள் செய்யக் கோரிக்கை விடுத்து வருகிறார்.  அவருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்றுள்ளார்.  அவர் துபாயில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அந்த சந்திப்பில் தங்கம் தென்னரசு,

”முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரின் துபாய் பயணம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.    தனி விமானத்தில் முதல்வர் சென்றதற்கு முக்கிய காரணம் தற்போதைய சூழ்நிலையில் விமான வசதிகள் சரியாக இல்லாததே ஆகும்.   அதற்கான செலவுகளை திமுக தான் செய்கிறதே தவிர அரசு செய்யவில்லை.

அடுத்ததாக உலக வர்த்தக பொருட்காட்சி முடிவடையும் தறுவாயில் முதல்வர் வந்துள்ளதாக எடப்பாடி கூறி உள்ளார்.  கொரோனாவால் முதல்வர் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த பொருட்காட்சிக்கு முதலில் வந்ததை விட முடியும் நேரத்தில்தான் ஏராளமானோர் வருகின்றனர்.    எனவே தற்போது தமிழக அரங்கை திறந்து வைப்பதே முக்கிய நோக்கமாகும். 

மேலும் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகள் குறித்துப் பேசி உள்ளார்.  அவரிடம் நான் கேட்கிறேன்,  எடப்பாடி முதல்வராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது?  முதல்வர் இந்த மூன்று நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ 6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

முந்தைய ஆட்சியில் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக ஈர்த்தாக சொல்லப்படும் முதலீடுகள் குறித்து சட்டமன்றத்தில் நான் மிகத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறி அவையெல்லாம் அவை குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.”

எனக் கூறி உள்ளார்.