சென்னை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்து இந்த மனுவைக் கடந்த 15-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பரிசோதித்து இரு மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையைச் சந்தேகிக்க முடியாது எனக் கூறி, அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம் என அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு கண்டறியப்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.