சென்னை

மந்தூரார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெகு நேரம் சோதனை நடத்தினர்.  பிறகு, அமைச்சரை விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து அழைத்துச் செல்ல முயன்றனர். அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

செந்தில் பாலாஜியின் சகோதரரிடம் அமைச்சரின் கைது குறித்துத் தெரிவிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு ஏற்கனவே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சி.ஆர்.பி.எஃப். வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜிக்கு இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்றும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.