சென்னை
நேற்று இரவு அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி சோதனை நடத்தினார்கள். சோதனை முடிவில் நள்ளிரவில் அவரை இல்லத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அப்போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய இதய ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதாகத் தெரிவித்து அவருக்கு உடனடி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
நீதிபதியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து செந்தில் பாலாஜியை ‘ரிமாண்ட்’ செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ்,துறை அதிகாரிகளுடன் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து நீதிபதி எஸ்.அல்லியைச் சந்தித்து சம்பவத்தை விளக்கினார்கள்.
நேற்று முன் தினம் நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு நேரில் வந்து, செந்தில் பாலாஜியை 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அமைச்சருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யக் காவேரி மருத்துவமனைக்கு மாற்றச் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
நேற்று இரவு 9.15 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆம்புலன்ஸ் மூலமாகக் காவேரி மருத்துவமனைக்குப் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அழைத்துச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸ் உடன் இன்னொரு ஆம்புலன்சும் சைரன் ஒலித்தபடி முன்னால் சென்று 15 நிமிடங்களில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றது.
அங்கு செந்தில் பாலாஜியை மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர். அடுத்தகட்டமாக வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாகவும் ஆலோசித்தனர் இன்று காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.