சென்னை: பார் ஒதுக்குவதில் பாரபட்சம் இல்லை என்று, பார் உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்து வருபவபர் செந்தில் பாலாஜி. இவரது கட்டுப்பாட்டில்தான் டாஸ்மாக் கடைகள், பார்கள் வருகிறது. கடந்த மாதம், டாஸ்மாக் பார் ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, முன்னாள் பார் உரிமையாளர்கள் உள்பட ஏராளமான திமுகவினரும் பார் ஏலத்தை கைப்பற்ற விண்ணப்பித்தனர்.
இதில், திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு பார் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பார் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக பார் உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர். தங்களிடம் ஏற்கனவே இருந்த பார் உரிமம் ரத்து செய்யப் பட்டு, கட்சிக்காரர்களுக்கு பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல கோடி கை மாறி உள்ளது என்று பார் உரிமை யாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் இருந்து பார் உரிமையாளர்கள் இன்று சென்னையில் அமைச்சர் வீடு முன்பு திரண்டனர். அமைச்சரை சந்திக்க முயன்றனர். ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படாததால், அமைச்சர் வீடு அமைந்துள்ள அடையாறு பசுமை வழிச்சாலை (கிரின்ஸ் ரோடு)யில் திரண்டனர். ஏராளமான கார்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோரும், பசுமை வழிச்சாலையில் கூடி, செந்தில் பாலாஜி வீடு முன்பு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர் இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பொற்கால ஆட்சியில் ஒரு பொல்லாத அமைச்சர்.. அமைச்சரே உங்களுக்கு கோடி.. எங்களுக்கு தெரு கோடி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கோஷம் எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் பார் ஏலம் வெளிப்படைத் தன்மையுடன்தான் நடைபெற்று வருகிறது, டெண்டரில் ஒளிவுமறைவு இல்லை என்று கூறினார்.
மேலும், பார் ஏலப்படிவத்தை யார் வேண்டுமானாலும் பெறலாம் என்று கூறியதுடன், இந்த ஆண்டு பார் ஏலம் கேட்டு 11,715 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உ ள்ளதாகவும் கூறினார்.