அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அவரை நீதிமன்ற காவலில் வைத்ததை எதிர்த்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
இதனையடுத்து மூன்றாவது நீதிபதி முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறையும், செந்தில் பாலாஜி சார்பாக வாதிட மூத்த வழக்கறிஞர் செவ்வாய்கிழமை வர இருப்பதையடுத்து விசாரணையை அப்போது நடத்தலாம் என்று திமுக வழ்கறிஞர்களும் நேற்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து வழக்கின் விரிவான விசாரணையை நாளை (சனி்க்கிழமை) நடத்தலாமா அல்லது செவ்வாயன்று நடத்நலாமா என்பது குறித்து மூன்றாவது நீதிபதி இன்று விவாதித்தார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் உள்ளதால் அவர் முழுவதும் குணமடைந்த பின் காவல் நாட்கள் கணக்கிடப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக்கொண்டதால் இது விசாரணைக்கு உகந்த மனுதான் என்று திமுக தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
இருதரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதி சி.வி. கார்த்திகேயன் இந்த வழக்கை ஜூலை 11 மற்றும் 12 தேதிகளில் விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.