சென்னை: ஊழல் வழக்கில் ஒராண்டுகளுக்கு பிறகு நிபந்தனை ஜாமின் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சரான நிலையில், அவர்மீதான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, அவரை நீதிமன்ற குற்றவாளி கூண்டில் ஏற்ற வைத்து விசாரணை நடைபெற்றது. இது அங்கிந்த திமுக வழக்கறிஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக அரசியல் வரலாற்றில், அமைச்சர் ஒருவர் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது இதுவே முதன்முறை என்று விமர்சிக்கப்படுகிறது.
கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் கடந்த திமுக ஆட்சியின்போது, செந்தில்பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜி, செப்டம்பர் 26ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 4ந்தேதி அன்று விசாரணைக்கு அமலாக்கதுறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
ஏற்கனவே கடந்த மாதம் (செப்டம்பர் ) 30ந்தேதி அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார். அன்றைய தினம் ஆஜராகாத அமலாக்கத் துறை தரப்பு சாட்சியான, தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார். அமலாக்க துறை சாட்சியான மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார். அப்போது நீதிபதியிடம், வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்காமல் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியுமா? என உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற உள்ளோம். அதனால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சி விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதன் பின் தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கெளதமன் குறுக்கு விசாரணை செய்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட சாட்சி விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி, குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலையை கருதி அவர் கூண்டில் அமர வைக்கப்பட்டார். தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை அக்டோபர் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.