சென்னை:   எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீரென சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில்,  அவர் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், திமுக அமைச்சர் சேகர்பாபு அவரை சபாநாயகர் அறையிலேயே வைத்து ரகசியமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையனை திமுகவுக்கு இழுக்கும் வகையில் பேரம் பேசியதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்,  ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களுடன் இணைந்து, எடப்பாடிக்கு எதிராக போராடுவாரா, அல்லது மாற்று கட்சியில் இணைவாரா என ஊடகங்கள், சமுக வலைதளங்களில் பேசும்பொருளாக மாறி உள்ளன. இந்த பரபரப்புக்கு இடையில், இன்று காலை தலைமைச்செயலகம் வந்த செங்கோட்டையன்,  சட்டமன்ற  அலுவலகத்தில் இருந்த சபாநாயகர்  அப்பாவுவை சந்தித்து  தனது ராஜினாமா கடிதம் அளித்தார்.

இதையடுத்து, அவர் அங்கிருந்து புறப்பட முயற்சித்தபோது, அங்கு திடீரென வந்த அமைச்சர் சேகர் பாபு அவரை சந்தித்து பேசினார்.  ரகசிய குரலில் இந்த சந்திப்பு  சுமார் 5 நிமிடங்கள் வரை  நடைபெற்றது.  இன்று திடீர் திருப்பமாக சேகர் பாபுவை சந்தித்து பேசியது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் செங்கோட்டையனிடன் கேள்வி எழுப்பியபோது, அவர்   ஒருநாள் பொறுத்து இருங்கள் என்று கூறினார்.

நாளை உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை திமுக உற்சாகமாக கொண்டாட உள்ளது. இதனால், நாளை உதயநிதி முன்னிலையில், செங்கோட்டையன் திமுகவில் இணைகிறாரா? அல்லது விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளாரா? என்பது பில்லியன் டாலர் கேள்வியாகவே நீடிக்கிறது.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்