சென்னை: 100 ஆண்டுகளாக இல்லாத அளவில் இந்து சமய அறநிலையத்துறையில் ஏராளமான  திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல கோடி மதிப்புள்ள  கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். மேலும், கடந்த 9 மாத செயல்பாடுகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கவுன்சிலர் பிரியதர்ஷினியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட  அமைச்சர் பி.கே.சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை, ஒட்டுமொத்த தமிழக மக்களும் தங்களது வாக்குகள் மூலம் திமுகவின்  9 மாத கால ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். அதனால், தற்பொழுது வெற்றிபெற்றுள்ள மாமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைகளை அறிந்து, மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி தர பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது என்பது பெருமைப்படத்தக்க ஒன்றாகும். சென்னை மாநகரில் ஆட்சியதிகாரம் திமுக வசம் உள்ளது. எம்பிக்களும், எம்எல்ஏக்களும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள். அதேபோல் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர். அனைவரும் சேர்ந்து பணியாற்றினால் எழில்மிகு சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்ற முடியும்/

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம், கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத அளவில் தற்போது ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.  பக்தர்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அதனை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.   பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் கிடந்த கோவில்  நிலங்கள் மீட்கும் பணியும், வாடகை வசூலும் நடைபெற்று வருகிறது.

கடந்த 9 மாத திமுக ஆட்சியில், 200 கோடி செலவில் திருக்கோயில் திருப்பணிகள், குடமுழுக்கு திருப்பணிகள், நந்தவனங்கள் பராமரிப்பு, புதிய குளங்கள் ஏற்படுத்து தல், பழைய குளங்களை தூர்வாருதல், திருத்தேர்களை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறைக்கு 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அதனையும் தாண்டி செலவு செய்ப்யபட்டு ருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 9 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒதுக்கிய நிதி எவ்வளவு, எந்தெந்த திட்டங்களுக்கு அவை செலவிடப்பட்டது, எந்தெந்த திட்டங்களுக்காக செலவிடப்பட உள்ளது, எந்தெந்த திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, எந்தெந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் துவங்கப்பட உள்ளது , என்பது குறித்து இன்னும் சில நாட்டில் வெளிப்படை தன்மையுடன் அறிக்கையாக வெளியிட உள்ளோம்.

 இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.