கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி குளிப்பதற்காக ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டியை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். இதையடுத்து யானை கல்யாணி அந்த நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு மிகப்பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கோவில்களில், யானைகளுக்கு குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ள நிலையில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்யாணி என்ற யானைக்கு கோவில் வளாகத்தில் மாபெரும் குளியல் தொட்டி கட்டப்பட்டது.
ரூ.60 லட்சம் மதிப்பீட்டில், பட்டீஸ்வரர் கோவிலின் அருகே அங்காளம்மன் கோவில் பின்புறத்தில் 5.5 ஏக்கர் பரப்பளவில் தலா 32 அடி நீளம் மற்றும் அகலத்தில், 4 அடி உயரத்திற்கு கட்டப்பட்ட இந்த தொட்டி, 1.30 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும். குளியல் தொட்டி அமைக்கும் பணி முடிவடைந்தது. அதேபோல், யானை நடைபயிற்சி மேற்கொள்வதற்காக மணல் மற்றும் கிணற்று மண்ணை கொண்டு நடை பாதையும் அமைக்கப்பட்டது.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குளியல் தொட்டியை ரிப்பன் வெட்டி யானை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, கல்யாணி யானை தொட்டியில் இறங்கி ஆனந்த குளியல் போட்டது.
இதனை பக்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.