சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்துள்ளது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு விளக்கம் தெரிவித்து உள்ளார்.
இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான விநாயக சதுர்த்தி விழாவுக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது. பொதுஇடங்களில் விநாயகர் சிலை அமைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மட்டுமின்றி விநாயகர் சிலை தயாரிக்கும் சிறு தயாரிப்பாளர்கள், வியாபாரிகளிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மாநில கோரிக்கை விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாகர்கோவில் காந்தி, விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மத்திய அரசு உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா மூன்றாம் நிலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்த தடை விதிக்க வலியுறுத்தி இருக்கிறார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலாலே தான் விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது என கூறியதுடன், நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த பரிசீலனை செய்யப்படும் என்றதுடன், உறுப்பினரின் கோரிக்கை அனைத்தையுமே நிறைவேற்றி கொடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளர் என்றும் கூறினார்.
இதற்கிடையில், நாளை திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் மாரத்தான் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் காவல்துறை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டி ருக்கிறது. நெருக்கடியான இந்த சூழலில் நிகழ்ச்சிக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்களின் பண்டிகைகளுக்கு தடை விதித்துள்ள தமிழகஅரசு, மாரத்தான் போட்டி நடத்த எப்படி அனுமதி வழங்கியது என பாஜகவின் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். உதயநிதி ரசிகர்மன்ற போட்டிக்கு அனுமதி வழங்கினால், விநாயகர் சிலை வைக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இதனால், அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.