திருப்பூர்

வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு நீரின் நுரைதான் நொய்யல் ஆற்றில் காணப்படுகிறது என அமைச்சர் கருப்பண்ணன் கூறி உள்ளார்.

நொய்யல் ஆற்றில் நிறைய நுரையாக சமீபத்தில் காணப்பட்டது.   மழையை பயன்படுத்தி சாயப் பட்டறை கழிவு நீரை சுத்தீகரிக்காமல் ஆற்றில் விடப்பட்டதால் தான் இவ்வளவு நுரை வந்துள்ளது என சமூக ஆர்வலர் அச்சம் தெரிவித்தனர்.   ஆற்றை ஓட்டியுள்ள வீடுகளிலும் நுரை வெள்ளத்தின் காரணமாக உள்ளே புகுந்துள்ளது.   மக்கள் இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் தனது கவலையை தெரிவித்தனர்.

அமைச்சர் கருப்பண்ணன்

இதை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து தமிழக சுற்றுச் சூழல் அமைச்சர் அந்தப் பகுதிகளில் ஆய்வு நடத்தினார்.  மேலும் திருப்பூர் மாவட்ட சாய தொழிலாளர்கள், சாயப் பட்டறை உரிமையாளர்கள், மற்றும் பலருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.   ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கருப்பண்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது :

”கடும் மழையை பயன்படுத்தி சாயக் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலந்து விடுவதாக எழுந்துள்ள புகார்கள் மிகவும் தவறானது.   பல நாட்களுக்கு முன்பு இந்த பிரச்னை இருந்தது.   ஆனால் அரசு அளிட்த நிதி உதவிகள், மற்றும் கடன் உதவிகளால் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு விட்டன.  தற்போது சாயப்பட்டறை பிரச்னை என்பதே கிடையாது.

கோவை மற்றும் அதன் புறநகர்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியாகும் சோப்பு மற்றும் கழிவுகளால் நொய்யால் ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது.  இதை தேவை இன்றி நச்சு நுரை என சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.   பத்திரிகைகள் மக்களுக்கு தேவையான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும்” என கூறி உள்ளார்.

அமைச்சரின் உரையால்  பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.  அவர்கள், “நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பது உண்மை.  அதனால் தான் நாங்கள் அதை பதிவு செய்கிறோம்.  ஆனால் அந்த நிகழ்வை எவ்வாறு நீங்கள் உண்மை அற்றது என சொல்லலாம்?” என கேட்டனர்.   இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

திகைத்துப் போன அமைச்சர் சம்பந்தம் இல்லாமல் ஏதோ மழுப்பலான பதில்களைச் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.   அமைச்சர்கள் தங்களின் செய்திகள் உண்மையற்றது என சொன்னதினால் பத்திரிகையாளர்கள்  கடும் அதிருப்தியில் உள்ளனர்.