டில்லி

ஃபதேபூர் சிக்ரியில் ஒரு ஸ்விஸ் ஜோடிகள் தாக்கப்பட்டது நமது நாட்டுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், உ பி முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

குவெண்டின் ஜெரிமி கிளர்க் மற்றும் அவரது பெண் தோழி மேரி டுரோஸ் ஆகியோர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர்.   அவர்கள் ஆக்ரா நகருக்கு அருகில் உள்ள ஃபதேபூர் சிக்ரிக்கு சென்று சுற்றிப் பார்த்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர்.  இதனால் காயமடைந்த இருவரும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   முன்னாள் சுற்றுலா அமைச்சரும் இன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சருமான மஹேஷ் ஷர்மா இது நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அவமானம் என கூறி உள்ளார்.   மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்திரப் பிரதேச அரசை கேட்டுள்ளார்.

இது குறித்து சுற்றுலாத் துறை அமைச்சர் கே. ஜே அல்ஃபோன்ஸ் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.  அதில் “உத்திரப் பிரதேசத்தில் ஸ்விஸ் ஜோடிகள் மேல் நடந்த தாக்குதல் கண்டனத்துக்குறியது.  இதனால் நமது நாட்டைப் பற்றி வெளிநாட்டினருக்கு எதிர்மறையான கருத்துக்கள் தான் உருவாகும்.   இதன் மூலம் நமது நாட்டுக்கு அவப்பெயர் உண்டாகக்கூடும்.   இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்து நிறுத்துவது உங்களின் முக்கிய கடமை ஆகும்.   இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் நமது நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும்” என தெரிவித்துள்ளார்.