சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறி வருவதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது புயலாக வலுப்பற்றுள்ள நிவர் புயல் நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் மற்றும் புதுவை அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “நிவர் புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம்; புயல் குறித்து பதற்றமடைய வேண்டாம்; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் . அனைத்து நிவாரண முகாம்களில் மக்களுக்கு தடையற்ற உணவு அளிக்கப்படுகிறது, நாளை வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு தேவையான பொருட்களை மக்கள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
36 வருவாய் மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது . நீர் தேக்கங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. உபரி நீர் திறப்பதற்கு அந்த குழுவானது நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், நிவர் புயலால் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் ரேஷன் கடைகளை முன்கூட்டியே திறக்கலாம் அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் கடைகளை எப்போது திறக்கலாம் என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்து, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.