டெல்லி: பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்பியான சசிதரூரிடம், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன், சசிதரூர், பிரதமர் மோடி, சிவலிங்கத்தில் அமர்ந்துள்ள தேள் போல கொடிய விஷமுடையவர் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.அதற்கு, மனைவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சசிதரூருக்கு, மோடியை விமர்சிக்க தகுதிஇல்லை என்று ரவிசங்கர் பதிலடி கொடுத்தார்.

பிறகு இந்த வழக்கில், சுனந்தா புஷ்கர் மரணம் கொலை அல்ல என்று குற்றப்பத்திரிகையில் இருப்பதை சசிதரூர் சுட்டிக்காட்டி, ரவி சங்கர் பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன், தன் மீது சுமத்திய அவதுாறு குற்றச்சாட்டை திரும்பப் பெறுமாறும், ரவிசங்கர் பிரசாத்திற்கு, நோட்டீஸ் அனுப்பினார்

திருவனந்தபுரம் முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ரவிசங்கர் பிரசாத் மீது அவதுாறு வழக்கையும் அவர் தாக்கல் செய்தார். இந் நிலையில் இந்த விவகாரத்தில் சசிதரூரிடம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஒரு கடிதத்தையும் அனுப்பி உள்ளார். உங்கள் மீது நான் சுமத்திய குற்றச்சாட்டுக்கு உண்மையில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதற்காக வருத்தப்படுவதாகவும், தாம் பேசிய கருத்துகளை திரும்ப பெறுவதாகவும் ரவி சங்கர் பிரசாத் அதில் கூறி இருக்கிறார்.

இதற்கு சசிதரூரும் பதில் கடிதம் ஒன்றை ரவிசங்கர் பிரசாத்துக்கு அனுப்பி இருக்கிறார். அதில், உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன், வரவேற்கிறேன்.

நமக்கான உறவு பாலம் பலப்படும் வகையில் இந்த விவகாரத்தை முடித்துக் கொள்வது என்பது மகிழ்ச்சியை தருகிறது. இது தொடர்பாக உங்கள் மீதான அவதூறு வழக்கை திரும்ப பெறுமாறு எனது வழக்கறிஞர்களிடம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.