சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதாக விவாதம் நடந்து வரும் நிலையில்,  இன்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தாங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

வனத்துறை புதிய அறிவிப்புகள்:

  1. திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் புதிய பறவைகள் சரணாலயமாக மாற்ற ரூபாயை 7.5 கோடி ஒதுக்கீடு செய்து வரும்.
  2. கிராமந்தோறும் மரகத பூஞ்சோலைகள் 100 ஹெக்டேர் பரப்பளவில் 25 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
  3. காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  4. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டு ரூபாய் 5 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  5. தமிழ்நாடு அரசு வனத் துறையின் முன்னோடி முயற்சியாக, கள ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 2.32 கோடி செலவில் 256 மின்சார இரு சக்கர வாகனங்களை கொள்முதல் செய்து வழங்க உள்ளது.
  6. மன்னார் வளைகுடாவில் 3.6 ஹெக்டர் பரப்பளவில் பவளப் பாறைகளின் மீளுருவாக்கப் பணிக்காக 3.6 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி, கண்காணிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் அரசால் மேற்கொள்ளப்படும்.
  7. சென்னையில் ரூபாய் 6.3 கோடி செலவில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.
  8. அடையாறு கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் பசுமை பரப்பை அதிகரிக்க 3.42 கோடி மரக்கன்றுகள் ரூபாய் 237 கோடி செலவில் பசுமை தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
  9. சூழல் சுற்றுலா சுற்றுலா தலங்கள் புதிதாக, ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் ரூபாய் 14 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
  10. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர்ப்பன்மை ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம் ரூபாய் 3.6 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
  11. வனப்பகுதியில் உள்ள அன்னியகளைத் தாவர இனங்கள் அகற்ற இந்த ஆண்டிற்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  12. வனத்துறையின் மேலாண்மையை செயல்பாடுகள் மற்றும் சேவைகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.
  13. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சோலைகாடுகள் பாதுகாப்பு மையம் சுமார் 116 ஹெக்டர் பரப்பளவு, ரூ5.2 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது உள்பட பல்வேறு அறிவிப்புகளை  வெளியிட்டார்.