புர்னியா, பீகார்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜக பேரணியில் கேட்ட கேள்வியால் அவரே மாட்டிக் கொண்டுள்ளார்.

பாஜக அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு வருடம் தோறும் ரூ. 6000 நிதி உதவி அளிக்க உள்ளதாக அறிவித்தது.   அந்த திட்டம் உடனடியாக அமுலுக்கு வந்தது.   அதன்படி பல விவசாயிகளுக்கு முதல் தவணையாக தேர்தலுக்கு முன்பு ரூ.2000 வழங்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் நேற்று முன் தினம் பீகார் மாநிலத்தில் உள்ள புர்னியாவில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்துக் கொண்டுள்ளார்.   அந்த பேரணியில் அவர் பாஜகவின் சாதனைகள் குறித்து விவரித்துக் கொண்டு இருந்தார்.   அதில் இந்த விவசாயிகள் நிதி உதவி பற்றியும் குறிப்பிட்டு விவசாயிகளுக்கு பாஜக என்றும் துணை இருக்கும் என தெரிவித்தார்.

அத்துடன் ராஜ்நாத் சிங் கூடியிருந்தோரை பார்த்து, “எனது அன்பு விவசாய சகோதரர்களே, உங்களுக்கு உதவித் தொகையின் முதல் தவணை ரூ.2000 வந்து விட்டதா?  எத்தனை பேருக்கு ரூ,2000 வந்துள்ளது? ” என கேள்வி எழுப்பி உள்ளார்.  அஙு குட்டியிருந்த விவசாயிகள்  தங்களுக்கு வரவில்லை என குரல் எழுப்பினார்கள்.

உடனே ராஜ்நாத் சிங், “இல்லை.   இப்படி நடக்க வாய்ப்பில்லை. கிடைக்காதவர்கள் கையை உயர்த்துங்கள்” என கூறியதும் அனைவரும் கை உயர்த்தி உள்ளனர்.  அதன் பிறகு அவர், “சரி.  கிடைத்தவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என கூறி உள்ளார்.    ஒருவரும் கை உயர்த்தவில்லை.    இது வீடியோ பதிவாகி வெளியாகி உள்ளது.

 

இந்த வீடியோ பதிவில் பேரணியில் கலந்துக் கொண்ட விவசாயிகள் “அமைச்சர் சிக்கிக் கொண்டார்.  அவர் விரித்த வலையில் அவரே மாட்டிக் கொண்டார்” என கூறுவதும் பதிவாகி உள்ளது.