சென்னை:
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள், அது அதிமுக கருத்து அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சமீப காலமா கஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள், வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் மகனை வழிமறித்து போராட்டம் நடத்தியது குறித்து பேசும்போது, அவர்களின் கைகளை உடைக்கத் தெரியும் என்று அதிரடியாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இன்று எடப்பாடி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்திலும், ராஜேந்திர பாலாஜியின் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வன்முறை மற்றும் மதவெறியை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பேசி வருவதாக மூத்த அமைச்சர்கள் கடும் அதிர்ப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இஸ்லாமியர்கள் பற்றி பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அவர் பேசியது அ.தி.மு.க. கருத்து கிடையாது. அது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
அவரது கருத்தாக இல்லாத பட்சத்தில் கவர்னரிடம் எப்படி முறையிடலாம்? என்று கேள்வி எழுப்பியவர், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் டி.என்.பி.எஸ்.சி.யை கண்டித்து தி.மு.க. நடத்தும் போராட்டம் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.