அரும்புக்கோட்டை: திமுக தலைவர் குறித்து கடுமையாக விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை அருப்புக்கோட்டையில் திமுகவில் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் அரசியல் களம்  சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் விமர்சனமும் அதிகரித்து வருகின்றன.  2ஜி ஊழல் குறித்து முதல்வர் எடப்பாடி விமர்சித்த நிலையில், 2ஜி வழக்கில் தொடர்புடைய ஆ.ராஜா பதில் தெரிவித்தார். அப்போது,   2ஜி குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்குநேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டார்னி ஜெனரல் உள்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன்’’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து  நேற்று விருதுநகரில் செய்தியாளர் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  ராஜாவுக்கு பதில் அளிக்க முதல்வர் தேவையில்லை, நான் தயார் என்றும்,  திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு 2 ஜி அலைக்கற்றை ஊழல் நிகழ்ந்துள்ளது. அவருடைய குடும்ப தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி ஊழலில் கைமாறி உள்ளது. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிக்குவார்’’ என  குற்றம்சாட்டினார்.

இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இன்று திமுகவை அவதூறாக விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை திமுகவினர் எரித்தனர்.

இதைக் கேள்விப்பட்டு அந்தப் பகுதியில் அ.தி.மு.க-வினரும் திரள ஆரம்பித்தனர், அவர்கள், தி.மு.க-வுக்கு எதிராகக் கோஷமிட்டபடி மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை எரிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை எரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்தனர். தி.மு.க-வினரும் அ.தி.மு.க-வினரும் நேருக்கு நேராக வாக்குவாதம் செய்து மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

காவல்துறையினர் தடியடி நடத்தி இரண்டு தரப்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். தி.மு.க-வினர் 160-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டார்கள்.