புதுக்கோட்டை: 69பேர் உயிரிழப்புக்கு காரணமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி உத்தர விட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக நிர்வாகி என்பது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக திமுக பிரமுகர் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு பின்புலமாக இருந்துவந்த அரசியல் கட்சியினர்மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் கள்ளச்சாராய உயிரிழப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி நேற்று (நவம்பர் 20) சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளதாகவும், இப்படி மாற்றியிருப்பது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும் என கூறியுள்ளார் சட்ட அமைச்சர் ரகுபதி.
கள்ளச்சாராய மரணங்களில் அரசும், காவல்துறையும் செயலற்றதாக இருந்ததால் சி.பி.ஐ விசாரணை கோரியதாக, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் கூறுகின்றன.
கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சுகுணாபுரம் என்ற பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தியதில் 68 பேர் உயிரிழந்த நிலையில், பலருக்கு கண்பார்வையும் பறிபோயுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 68 பேர் உயிரிழந்த நிலையில், 161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 24 பேர் வரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்தால் உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காது.
அதனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த கால விசாரணைகளின்போது, “தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக மாவட்ட வாரியாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு இதுவரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது?என சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும், கள்ளச்சாராய சாவுக்கு நிதி வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையின்போது, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?”என காவல்துறையினருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 19ம் தேதி விசாரணையின்போது, காவல்துறையினரின் பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் , “கள்ளக் குறிச்சி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரின் பணியிடை நீக்கம் உடனடியாக திரும்ப பெறப்பட்டதற்கான காரணம் என்ன? துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது?” என கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு காவல்துறையிடம் இருந்து முறையான பதில்கிடைக்காத நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் நேற்று (நவ 20) தீர்ப்பளித்த நீதிபதிகள், “சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள், தீங்குகள் மதுவால் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவங்கள் ஒரு எச்சரிக்கையாக உள்ளது.
காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை.
மாநில காவல்துறை கண்டும் காணமாலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக்குகிறது.
அதே வேளையில் காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு,
அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்.
சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும்,
தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சிபிசிஐடி நடத்திய விசாரணை அறிக்கையை சிபிஐ வசம் 2 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்,”எனவும் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக சீர்குலைவு ஏற்படும் என கூறியுள்ளார்.
தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தொடர்பாக, சட்ட ஆலோசகர்களுடன் முதல்வர் ஆலோசித்து, உரிய முடிவை மேற்கொள்வார்.
சிபிசிஐடி விசாரணையே போதும் என நிரூபிக்கும் அளவுக்கு எங்களிடம் ஆதாரம் உள்ளதால், மேல்முறையீட்டில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
விஷச்சாராயத்தை தடுக்க தவறியதாக சில அலுவலர்கள் இடமாற்றம், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனினும், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவர்களுக்கு பணி வழங்கிதான் ஆக வேண்டும் என்பதுதான் விதி என்றார்.
கஸ்தூரி வழக்கு தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதா, வேண்டாமா என்பதை அரசு வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். என்றார்.
ஆசிரியை பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து கொலை செய்யப்பட்டு உள்ளாரே என்ற கேள்விக்கு, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களுக்கு அரசு எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? என கைவிரித்தார்.
மத்திய அரசின் 3 சட்டங்களை எதிர்த்து, சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டற்காக என்னை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வி.பி.துரைசாமி தெரிவித்து இருக்கிறாரே என்ற கேள்விக்கு, . மத்திய அரசை எதிர்த்து கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறுவது தவறு என்றவர்,
தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தாரே என்ற கேள்விக்கு, 2016 பேரவைத் தேர்தலில் மதுவிலக்கை கொண்டு வருவோம் என வாக்குறுதி தந்த திமுகவை மக்கள் ஆதரிக்க வில்லை. எனவே, வரும் தேர்தலில் மதுவிலக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்.