சென்னை: அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடியின் சகோதர் தியாகராஜன். இவர் சிறுநீரக சிறப்பு மருத்துவர். இவருக்கு திடீர் உடல்நலப் பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர்   இன்று அதிகாலை  3 மணியளவில் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது. இதை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து,  அவரது உடல் விழுப்புரத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் தியாகராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று மாலையில் அவரது உடல் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. மருதூர் இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.