சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்களுடன் தமிழகஉயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுபதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்ய திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாளை தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை யின்போது, கல்வி நிலையங்கள் திறப்பு, ஆன்லைன் கல்வி, மாணவர் சேர்க்கை, பருவத்தேர்வு மற்றும் நிர்வாக செயல்பாடுகள், செமஸ்டர் தேர்வு, தேர்ச்சி அறிவிப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.