விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் தற்போது திடீரென பிறழ் சாட்சிகளாக பல்டியடித்து வருவதால், வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி காவல்துறைக்கு விழுப்புரம் மாவட்ட ‘ நீதிபதி பூர்ணிமா உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கில், முக்கிய சாட்சியான ஓய்வுபெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் எந்த உத்தரவையும் நான் சுய நினைவுடன் போடவில்லை என கூறியுள்ளார். மேலும் 30 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி உள்ளனர். இதனால் வழக்கின் போக்கே திசைமாறி உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கிலும், அதிகாரத்துக்கு வந்தவுடன் பலர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், பின்னர், ஒருவர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் தலையிட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க செய்தது.
இந்த நிலையில், தற்போது திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிலும் தொடர்ந்து, முக்கிய சாட்சிகள் ஒவ்வொருவராக பிறழ் சாட்சிகளாக மாறி வருவது, காவல்துறை மற்றும் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி, அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் நேரில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் கூடுதலாக சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி கேட்டு ஏற்கனவே அரசு தரப்பில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அம்மனு மீதான விசாரணைக்காக ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் , இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிபதி பூர்ணிமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செம்மண் குவாரி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் தொடரும் ‘பிறழ் சாட்சிகள்’…