சென்னை; பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்ற வருகிறது. இன்று தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது,உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, பாலிடெக்னிக் கல்லூரி தங்களது தொகுதியில் அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய உறுப்பனிருக்கு பதில் கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியவர், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் கல்லூரிகள் கேட்கிறார்கள். ஆனால், தேவைப்படும் பட்சத்தில் புதிய கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில், பாலிடெக்னின் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே ” நான் முதல்வன் ” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியும், சுகாதாரமும் என் இரு கண்கள் என்று முதலமைச்சர் கூறியுள்ளார் என்று தெரிவித்ததுடன், கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் பல புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் நினைவுகூர்ந்தார்.