சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு  வழக்கில், அவர் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படாததால் விடுதலை செய்யப்படுவதாக கூறியுள்ளார்.  சுமார் 20 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற வந்த நிலையில், இன்று அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வெளியாகி உள்ளது.

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி வேலூர் நீதிமன்றம் ஜூன் மாதம் 28ந்தேதி விடுவித்த நிலையில், தற்போது நில அபரிகப்பு வழக்கில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் க.பொன்முடி கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக கடந்த 2003ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து அமைச்சர்  பொன்முடி, தற்போதைய துணைமேயர் சுரேஷ்குமார் உள்பட  10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

முன்னாள் ஆட்சியர் ராஜரத்தினம் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜெயவேல் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில்,  அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படாததால் விடுதலை செய்யப்படுவதாக கூறியுள்ளார்.