சென்னை:
மிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை அறிமுகம் செய்ய தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வைத்த வேண்டுகோளுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.

நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை படிக்கும்போது, மாணவர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், தாய்மொழியின் வளர்ச்சிக்கும் இது உதவும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிவெளியிட்டுள்ள அறிக்கையில்,
12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை தமிழில் திமுக அறிமுகம் செய்துவிட்டது. மருத்துவப் படிப்புக்கான பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 3 பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல் தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை காட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.