மதுரை: தமிழக அமைச்சர் மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் – எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணம் இன்று காலை மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  சட்டப்பேரவைத் தேர்தலின்போது,  திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார்.

தமிழக வணிகவரித்துறை அமைச்சராக இருப்பவர் பி.மூர்த்தி. இவரது மகன் திருமணம், மதுரை பாண்டிகோவில் அருகே ரிங் ரோட்டில், வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகில் 32 ஏக்கரில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.  வண்ண விளக்குகளாலும், அலங்காரத்தினாலும் ஜொலித்தது.  மாநாடுகளுக்குப் பந்தல் அமைக்கும் பிரபல மேடை அமைப்பாளர் பந்தல் சிவா மேடை அலங்காரங்களைச் செய்துள்ளார்.  நான்கு விதமான பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி,  ஒரே நேரத்தில் 15,000 பேர் திருமணத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் உணவருந்தும் வகையில் உணவு கூடம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், உணவு சமைக்க 750 சமையல் கலைஞர்கள் பணியாற்றியதாகவும், சைவ,  அசைவ உணவுகள் விருந்தினங்களக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு லட்சம் பேர் உணவருந்தும் வகையில் 1,700 ஆடுகளைக் கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டுள்ளது. மாநாடு  திருவிழா போல திருமணம் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடிகணக்கான ரூபாய் செலவில் நடைபெற்ற இந்த திருமணம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

 திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமண விழா அல்லாமல் மண்டல மாநாடு என்று இவ்விழாவை குறிப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று புகழாரம் சூட்டியவர், அமைச்சர் மூர்த்தி பொதுக்கூட்டம், அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப்பிரம்மாண்டமாக தான் செய்வார். தனி முத்திரை பதிப்பார். பிரம்மாண்டத்தை பதிப்பார். அதனால் மகனின் திருமணத்தை கட்சிக்குப் பயன்பட வேண்டும், கட்சியின் ஆட்சியின் சாதனை தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திருமணத்தை நடத்தியுள்ளார். ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்படக்கூடியவர் பி.மூர்த்தி என்று அவரை புகழ்ந்தார்.

திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிவு செய்து, அமைச்சரவை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்த ஸ்டாலின்,  மக்களுக்கு திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது என்றார்.  எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் எங்கள் பணி இருக்கும் என கூறியதுபோல எங்களது பணிகளை  நிறைவேற்றி வருகிறோம். இதனால், மக்களுக்கு நம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது என்றார்.

மக்கள்  நம்பிக்கையோடு என்னிடம் மனுக்களை தருகின்றனர். அந்த  மனு அளித்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு தருகிறார்கள். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட 100 நாட்களில் 75 சதவித மனுக்களுக்கு தீர்வு எட்டியுள்ளோம். நான் செல்லும்போது யார் மனு வைத்திருந்தாலும் வாங்கிவிடுவேன், மாற்றுத் திறனாளிகள் என்றால் நானே நேரில் சென்று வாங்குவேன் என்றார்.

மேலும், மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகம் திறப்பதற்கான 75 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு மைதான பணி, கீழடி பண்பாட்டு அரங்கம், பெருநகராட்சி குழுமம், சுற்றுவட்டச் சாலை, மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங், தமுக்க மாநாட்டு மையம், பாதாள சாக்கடை அமைப்பு பணி என ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அனைவரும் ஓயாமல் மக்கள் பணியாற்றி வருகிறோம். AM , PM பாக்காத சிஎம் என MM CM ஆக இருக்க வேண்டும் மினிட் டூ மினிட் சிம் ஆக இருக்க ஆசை அப்படி இருந்து CM நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என பாடுபடுகிறோம் என்றார்.

கடந்த காலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய சட்டத் திருத்தம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக  நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

திமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடியுடன் பேசுவதாக கூறுகிறார். அவருடைய எம்.எல்.ஏ.க்களே அவருடன் பேசுவதில்லை. திமுக எம்.எல்.ஏ.க்கள் பேசுவதாக புருடா விடுகிறார். அம்மையார் மறைவிற்குப் பின் அனைத்து தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளனர். அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போயுள்ளது. எடப்பாடியின் பதவி டெம்ப்ரவரி பதவி தான். பொய் பிரசாரத்தைப் பற்றி கவலை வேண்டாம். அதனைப் பற்றி பேச நேரமில்லை. மக்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்றார்.

முன்னதாக நேற்று இரவு மதுரையில் நடைபெற்ற வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. எம்.வி.முத்துராமலிங்கம் அவர்களின் பேரன் வி.கார்த்திக் முத்துராமலிங்கம் – எஸ்.கார்த்தியாயினி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.