சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால், தடுப்பூசி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9ந்தேதி டெல்லி செல்கிறார். அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்து பேசுகிறார்.
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளதால், தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறையால் பலர் ஏமாற்றமடைந்து வருகின்றன. சில இடங்களில் போராட்டங்களும் நடைபெறுகின்றன.
இதன் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் போனில் வலியுறுத்தியும் வருகிறார். இதையடுத்து, அமைச்சர் மா.சு.வையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனையும் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, வரும் 9-ம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார். அப்போது தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து அவருக்கு விளக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சருடன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடன் செல்கிறார்.