சென்னை:  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகளின்படி திருச்சியில் நடமாடும் காய்கறி விற்பனை சேவையை அமைச்சர் நேரு  இன்று காலை தொடங்கி வைத்தார் . இந்த வாகனம் மூலம் விற்பனை செய்யும் 10 காய்கறிகளுடன் கூடிய பையின் விலை ரூ.105 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இன்று ( 24.05.2021 ) காலை 4.00 மணி முதல் 31.05.2021 அன்று காலை 6.00 மணி வரை எவ்வித தளர்வுகளும் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விநியோகம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி,  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளுக்கும் தலா 5 வண்டிகள் (TATA ACE-3, தள்ளுவண்டி-2 ) மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி விநியோகம் செய்யப்படுகிறது.  இதற்கான நிகழ்ச்சி திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் உள்ள அண்ணாநகர் உழவர் சந்தையில்
நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்  நேரு  இன்று 24.05.2021 காலை 9.00 மணிக்கு  காய்கறி  விற்பனை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த காய்கறி விற்பனை  கீழ்கண்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1. முககவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்.
2. சானிடேசன் கட்டாயமாக பயன்படுத்தவேண்டும்.
3. காய்கறி விற்பனையின் போது கட்டாயமாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
4. காய்கறி / கனிகள் விற்பனை தவிர இதர வியபாரம் செய்ய அனுமதி இல்லை.
5. விற்பனை அனுமதிக்கப்பட்ட நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
6. வெப்ப பரிசோதனை கருவி அவசியம் வைத்திருக்க வேண்டும்.
7. மேற்கண்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் அனுமதி ரத்து உடனடியாக செய்து அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தேவை ஏற்படின் கூடுதலாக வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மளிகை பொருட்களை பொருத்தமட்டில் சம்மந்தப்பட்ட மளிகைகடை நிறுவனங்களில் தொலைபேசி மூலமாக தங்களுக்கு தேவையான மளிகை விவரத்தினை தெரிவிக்கும் பட்சத்தில் நேரடியாக வீட்டிற்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும்,  இதற்கென ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மேற்பார்வையாளர் பணியினை செம்மையாக செய்ய பணி அமர்த்தப்பட்டுள்ளது.

இந்த காய்கறி பையில் வெங்காயம், தக்காளி,  கத்தரிக்காய், வெண்டைக்காய, கேரட், வாழைக்காய், மிளகாய், இஞ்சி, எலுமிச்சை, கொத்தமல்லி கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு பையில்  போட்டு மொத்த விலை ரூ.105 என விலை நிர்ணயிக்கப்பட்டு உளளது.

இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் சரிவர பயன்படுத்த கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.