தர்மபுரி :
கொரோனா வைரஸ் காரணமாக அத்தியாவசிய தேவைகள் சரிவர கிடைக்க பெறாத மக்கள் ஒருபுறம், அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களே கிடைக்க பெறாமல் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் அவதியுறும் தினக்கூலிகள் மறுபுறம்.
இவர்களுக்கு மாறாக குடிப்பதற்கு மதுபானம் கிடைக்காமல் அல்லாடும் குடிமகன்கள் மற்றொருபுறம், போதைக்காக கிடைத்ததை குடித்து உயிரையும் விட்டுவருகின்றனர்.
சிலர் நூதனமாக வீட்டிலேயே குக்கரில் சாராயம் காய்ச்சி சத்தமில்லாமல் தானும் தனக்கு தெரிந்தவர்களுக்கும் சப்ளை செய்து குடிக்க, குக்கர் சத்தமும் சாராய வாசனையையும் அறிந்த அக்கம்பக்கத்தினரால் பிடிபடும் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றது.
சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கள்ள சாராயம் காய்ச்சும் வேலை தெரிந்தும் தெரியாமல் துரிதகதியில் அந்த பகுதியில் ஊற்றெடுத்து வருகிறது.
மேலும் சில மாவட்டங்களில், பனைமரங்கள் குலை விடும் பருவகாலம் ஆனதால் கள் இறக்க வசதியாக உள்ளது.
இந்நிலையில், தருமபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தருமபுரியில் மட்டும் இதுவரை 44 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அதுபோல், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு காவல் துறை ஆய்வாளர் சாராயம் காய்ச்ச உதவிய விவகாரம் பூதாகரமாகி அவரை ஆயுத படைக்கு மாற்றிய சம்பவமும் ஓசையில்லாமல் அரங்கேறி இருக்கிறது.
டாஸ்மாக் மூடப்பட்ட 20 நாளிலேயே இத்தனை களேபரங்கள், குறிப்பாக ஒரே மாவட்டத்தில் 44 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால். பல்வேறு வழிகளில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ளும் வழியை நாடி உயிரையும் விட துணிந்த குடிமகன்களால், எத்தனை உயிரிழப்புகள் ஏற்படுமோ தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.