நடிகர் ரஜினி நடித்து ஜூன் மாதம் வெளியாக இருக்கும் காலா படத்தின் எட்டு பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன. (ஏற்கெனவே ஒரு பாடல் வெளியிடப்பட்டது.)
இந்த பாடல்களில் புரட்சி, போராட்டம், உரிமை மீட்போம் போன்ற வார்த்தைகள் இருக்கின்றன.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது:
“சினிமா என்பது பவுர்புல் மீடியா. இதை நல்ல நோக்கத்தோடு பயன்படுத்தவேண்டும். எம்.ஜி.ஆர். அப்படித்தான் பயன்படுத்தினார். சிகரெட் புகைத்து வாய், மூக்கு வழியாக அவர் விட்டதில்லை. மது அருந்துவது போன்ற காட்சிகளை வைத்ததில்லை.
ஆனால் ரஜினி இதுவரை எந்த சமுதாய கருத்துக்களை புரட்சி கருத்துக்களை திரைப்படங்களில் சொல்லியிருக்கிறார்?
எம்.ஜி.ஆர். சதிலீலாவதி படத்தில் இருந்து தான் கடைசியாக நடித்த படம் வரை சமுதாயக்கருத்துக்களைக் கூறினார். “ஆளும் வரணும் அறிவும் வளரணும், நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே..” என்றெல்லாம் சிறந்த கருத்துக்களைக் கூறியவர் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் காலா போன்ற காளான்கள் அழிந்துபோய்விடும்.
செஞ்சிக்கோட்டை ஏறியவன் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது.
சுயநலத்தோடு திடீரென விழித்தெழுந்தது போல சொல்வது எல்லாம் எடுபடாது. அமைதியாக இருக்கும் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. அப்படி இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.