சென்னை: எஸ்.வி. சேகருக்கு மான, ரோஷம் இருக்கா? என அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
புதிய கல்விக்கொள்கை குறித்து, தமிழகஅரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு திமு உள்பட அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.
இந்த நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், அதிமுக அரசை விமர்சித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார், அதில், முதலமைச்சர் இருமொழிக்கொள்கையே தொடரும் எனச் சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சி தொடருமா என்றே தெரியவில்லை. தமிழ் படிக்கக் கூடாது. இந்தி படிக்க வேண்டும் என்று சொன்னார்களா? தி.மு.க.வின் விஷயங்களை அ.தி.மு.க. ஏன் தூக்கிச் சுமக்கிறது? எனப் புரிய வில்லை. அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள் என்று கடுமையாக விளாசியிருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி. சேகர் மான, ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அவர் 5 ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்சனை திருப்பித்தர வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார். விளம்பரத்திற்காக பேசும் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது” என தெரிவித்துள்ள ஜெயக்குமாரின் கருத்து, அதிமுக கட்சியின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது.