கள்ளக்குறிச்சி: நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை உயிரிந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மாணவியின் உடலை பெற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவியின் உடலுக்கு அமைச்சர் கணேசன், எம்எல்ஏ, ஆட்சியர் உள்பட உயர் அதிகாரிகள் மற்றும்  பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இதுதொடர்பான வன்முறை மற்றும் வழக்குகள் காரணமாக,  மாணவி ஸ்ரீமதியில் உடல் 11 நாட்களுக்கு பிறகு இன்று இறுதிசடங்குக்காக பெற்றோரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்த அந்த ஊரே கண்ணீரில் மிதக்கிறது.

மாணவியின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.  தொடர்ந்து எம்எல்ஏ, வசந்தம் கார்த்திகேயன், ஆட்சியர் ஷவரன் குமார் உள்பட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஊர்மக்கள் உள்பட ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  தொடர்ந்து இன்று காலை 11 மணிக்குள் மாணவியின் இறுதி சடங்கை செய்து முடிக்க, அங்கு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பள்ளி மாணவியின் இறுதி சடங்கில் உறவினர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், பிற அமைப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மாணவியின் சொந்த கிராமத்தில் ஏராளாமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி வன்முறை: தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் கைது