வேலூர்: திமுகவுக்கு வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். உங்களை விட உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று கூறினார். அவரது பூடகமான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இளைஞர்களுக்கு கட்சியில் முக்கிய பங்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதனால் அவர் விரைவில் அரசியலில் இருந்து ஒதுங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்கால பலம் என்று கூறியதுடன், கட்சிக்கு வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். உங்களை விட உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை மனிதில் வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இளைஞர்களின் புதிய சிந்தனை மற்றும் ஆற்றலை கட்சியில் இணைத்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியவர், வலியுறுத்தினார். இளைஞர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம், கட்சியை இன்னும் வெற்றிகரமாக நடத்த முடியும் என்றும், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். ஆனால் வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள். உங்களை விட உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள் என்று கூறினார்.
திமுகவில் அதிகார மோதல் தலைதூக்கி உள்ளது. ஏற்கனவே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், முதல் மதிப்பெண் வாங்கிய பழைய மாணவர்கள் இன்னும் வகுப்பறையை விட்டு செல்ல மறுக்கிறார்கள் என அமைச்சர் துரைமுருகனை குறிப்பிட்டு இளைஞர்களுக்கு வழி விடாமல் வயதான பிறகும் இன்னும் கட்சியில் நீடிக்கிறார் என்று மறைமுகமாக கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் கூட வரவேற்பு கொடுத்தனர். இதற்கு பதிலடியாக அமைச்சர் துரைமுருகன் ரஜினியை கடுமையாக விமர்சித்த நிலையில், பின்னர் திமுக மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது.
இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு 17 நாள் பயணமாக சென்றுள்ளதால், முன்னதாக முதலமைச்சர் பதவிக்கான பொறுப்பு தற்காலிகமாக மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடையில், அமைச்சர்கள் அன்பில் பொய்யாமொழி உள்பட சிலர், அமைச்சர் உதயநிதி துணைமுதல்வராக்க வேண்டும் போர்க்கொடி தூக்கினார். இது மூத்த அமைச்சர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், முதலமைச்சர் ஸ்டாலின், தனது வெளிநாட்டு பயணத்தின்போது, முதலமைச்சர் பொறுப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்த தகவலை அறிவிக்காமல் சென்று விட்டார். ஆனால், அமைச்சர் உதயநிதிதான், முதலமைச்சர் தொடங்கி வைக்க வேண்டிய திட்டங்களை தொடங்கி வைத்து, முதல்வருக்கான பொறுப்பை மறைமுகமாக வகித்து வருகிறார்.
பல மூத்த அமைச்சர்கள் உள்ள நிலையில், உதயநிதியை தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்தி வருவது, மூத்த அமைச்சர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டதும், இவர் சிங்கப்பூருக்கு பயணமானார். இதனால் மேலும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், திமுகவினரிடையே பேசி அமைச்சர் துரைமுருகனின் பூடகமான பேச்சு திமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நாம் அவர்களுக்கு நிச்சயம் வழிவிட வேண்டும் என்று கூறியதன் மூலம், துரைமுருகன் விரைவில் அரசியலுக்கு முழுக்கு போட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.