டில்லி
டில்லி மருத்துவமனையில் டெங்குவால் இறந்த சிறுமியின் பெற்றோரிடம் அதிக கட்டணம் வசூலித்தமைக்கு அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார்.
பிரபல மருத்துவமனையான ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 7 வயது சிறுமி ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். தொடர்ந்து 15 நாட்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்த நிர்வாகம் அவர் மரணம் அடைந்ததாக கூறி பின்னர் சிகிச்சைக்காக ரூ. 18 லட்சம் பில் கொடுத்ததாக தகவல் வந்தது. இந்த விவகாரம் அந்த சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவரால் ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டு அது வைரலாகியது.
அவர் தனது பதிவில், “எனது நன்பரின் ஏழுவயது மகள் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 15 நாள் சிகிச்சை பெற்றார். அதற்கு ரூ.18 லட்சம் பில் வழங்கப்பட்டுள்ளது. அதில் 2700 கை உறைகளும் அடங்கும். அந்த சிறுமி இறந்து விட்டார். ஊழல்வாதிகள்” என பதிந்திருந்தார். மேலும் “660 ஊசிகளுக்கு கட்டணம். அதாவது 7 வயது சிறுமிக்கு தினமும் 40 ஊசிகள். பெற்றோர்கள் எம் ஆர் ஐ அல்லது சிட் ஸ்கேன் செய்ய வற்புறுத்தியும் அது நடத்தவில்லை. சிறுமியை செயற்கை சுவாசத்தில் ஐந்தாம் நாளில் இருந்தே வைத்துள்ளனர்” என விளக்கம் அளித்திருந்தார்.
இதைக் கண்ட மத்திய அமைச்சர் ஜகத் பிரகாஷ் நத்தா தனது டிவிட்டரில், ”இந்த பில் குறித்து எனக்கு விளக்கம் அளிக்கவும். நான் உரிய நடவடிக்கைகள எடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை சார்பில், “அந்த சிறுமி கடுமையான டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் மருத்துவமனை அளித்தது. சிகிச்சை ஆரம்பத்தில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் இரண்டே நாட்களில் பின்னடைவு ஏற்பட்டதால் அவர் செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டார்.
செப்டம்பர் 14ஆம் தேதி அன்று அவருடைய பெற்றோர்கள் மருத்துவர்களின் ஆலோசனையையும் மீறி அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர். அன்றே அவர் இறந்து விட்டார். அவருடைய தந்தையிடம் விரிவான பில் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த பில் 20 பக்கங்கள் கொண்ட பில் ஆகும். அதில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருந்துகள் என அனைத்தும் பதிவிடப் பட்டிருந்தன. அந்த பில்லில் கண்டுள்ள அனைத்தும் சிகிச்சையின் போது உபயோகப்படுத்தப் பட்டவைகளே ஆகும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.