சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகிக்கும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி மதிப்பிலான 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த கடந்த 2002-ம் ஆண்டு பண மோசடி வழக்கில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றிபெற்று அமைச்சர் பதவியை அலங்கரித்து வருகிறார். தொடக்க காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவுடன் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநில அமைச்சர் என படிப்படியாக வளர்ச்சி அடைந்த நிலையில், பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 , 2006 ஆகிய இரு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், 2010 இடைத்தேர்தல், 2011, 2016, 2021ஆகிய நான்கு முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப்பட்டார். கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
2016ம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரை வென்றார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்று தமிழகத்தின் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரானார்.
இவர்மீது கடந்த கடந்த 2002-ம் ஆண்டு புகாரின் பேரில் பண மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போதுவரை நிலுவயைில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமாக 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்கள் உள்பட மொத்தம் ரூ. 6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இல்லங்களில் வருமானவரித்துறை யினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது ஆளும்கட்சியின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.