சென்னை:

சென்னையில் இன்றுமுதல் மீண்டும் ‘ஏ.சி.’ பஸ் இயக்கம் தொடங்குகிறது.  இந்த பேருந்துகளில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர், துணைமுதல்வர் ஏறி அமர்ந்து பேருந்தில் செய்யப்பட்ட வசதிகளை ஆய்வு செய்தனர்.

ஏசி பேருந்தில் ஏற்கனவே குறைந்த பட்ச கட்டணமாக ரூ.28 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டணம் ரூ.15 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. இனிமேல் வெயில் காலம் தொடங்கும் நிலையில், பயணிகளின் வசதிக்காக சென்னை மாநகர  போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குளிர்சாதனப் பேருந்துகள்  இயக்கப்படுகின்றது. சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட உள்ள குளிர் சாதனப் பேருந்தினை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டு இருக்கையில் அமர்ந்து பார்த்தார்கள்.

இந்த பேருந்தில், நவீன முறையில்  இருக்கைகள் வடிவமைக்கப்பட்டு, 40 பயணிகள் அமர்ந்த நிலையிலும், 20 பயணிகள் நின்ற நிலையிலும் பயணம் செய்யலாம். மேலும், பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தத்தினை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஏதுவாக ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்து  வழித்தட எண்.570, கோயம்பேடு முதல் சிறுசேரி வரையில் இயக்கப்படும். இந்த குளிர்சாதனப் பேருந்தில் குறைந்தபட்ச கட்டமணாக ரூ.15–ம், அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வரையிலான தூரத்திற்கு ரூ.60 வரையிலான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

வழித்தட எண்.91 தாம்பரம் முதல் திருவான்மியூர் வரையில் இயக்கப்படும் இந்த குளிர்சாதனப் பேருந்தில் குறைந்தபட்சமாக ரூ.15–ம், அதிகபட்சமாக ரூ.45–ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்ட வால்வோ குளிர்சாதனப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.28 நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது சாதாரண மக்களுக்கும் பயன் தரும் என்றால் அது மிகையில்லை. மேலும், எஞ்சியுள்ள 46 குளிர்சாதனப் பேருந்துகளும் பின்வரும் வழித்தடங்களில் விரையில் இயக்கப்படும்.

ஏ1 – சென்னை சென்ட்ரல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையப் பேருந்து நிலையம் முதல் திருவான்மியூர் வரை

19பி – தி.நகர் முதல் கேளம்பாக்கம், சிறுசேரி வரை

70வி – கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா வரை

102 – பிராட்வே முதல் கேளம்பாக்கம் வரை

95 – கிழக்கு தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை.

மேற்கண்ட தகவலை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகறித்த எசெய்தியாளர்களிடம் பேசிய  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,  சென்னை மாநகர மக்களின் ஆவலை பூர்த்தி செய்கின்ற வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 48 குளிர் சாதனப் பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது.

வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, முக்கியமான வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.