ரெய்ப்பூர்:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் ஈட்டுவதற்கான உத்தரவாதம் அளிப்போம் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
சட்டீஸ்கரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு விவசாயிகளே காரணம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து, விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:
வரும் மே மாதம் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும், குறைந்தபட்ச வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படும்.
நமது லட்சக்கணக்கான சகோதரிகளும்,சகோதரர்களும் வறுமையில் வாடும்போது, நம்மால் புதிய இந்தியாவை கட்டமைக்க முடியாது. இதுதான் நமது பார்வை, நமது வாக்குறுதி.
எனவே இந்த வரலாற்று முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. குறைந்தபட்ச வருவாய் ஈட்டுவதற்கான உத்தரவாதத்தை நாங்கள் அளிப்போம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் குறைந்தபட்ச வருவாயை ஈட்டுவார்கள், பசியின்றி இருப்பார்கள் என்பதே இதற்கு அர்த்தம் என்றார்.