சென்னை

வினின் ஊதா நிறப் பால் குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அரிக்கையில்.

”ஆவின் நிறுவனம் மூன்றடுக்கு நிர்வாக அமைப்பு முறையை கொண்டு விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலை நியாயமான மற்றும் நிலையான விலை கொடுத்து வாங்குவதையும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால்பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.ஆவின் நிறுவனத்தில் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது.

1. இந்திய நாட்டின் பசு மாடுகளின் பாலில் சராசரியாக 3.3% முதல் 4.3% கொழுப்பு சத்தும் 8.0% முதல் 8.5% இதர சத்துக்கள் அடங்கியிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பசும்பாலின் தரத்தில் வழங்கும் நோக்கத்தோடு 3.5% கொழுப்பு மற்றும் 8.5%இதர சத்துக்கள் அடங்கிய பாலுடன் வைட்டமின் ஏ மற்றும் டி தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு செறிவூட்டி ஊதா நிற பாக்கெட்டுகளில் ஆவின் டிலைட் என்ற பெயரில் லிட்டர் ஒன்றை 44 ரூபாய்க்கு வழங்கி வருகிறோம். சந்தை மதிப்பைஒப்பிட்டால் பல நிறுவனங்கள் இப்பாலை விற்கும் விலையை விட இது மிக மிக குறைந்த விலையாகும். இந்த பால் பசும்பாலின் முழுமையான தரத்தில் வழங்கப்படுவதால் கொழுப்பு கூடுதலாக சேர்த்த பச்சை நிற பாலைவிட சராசரி மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. எனவே இந்த வகை பாலை முன்னிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

.2. சில வாடிக்கையாளர்கள், குறிப்பாக மருத்துவர்களின் ஆலோசனை பெற்றவர்கள், தீவிர உடற்பயிற்சி செய்கின்றவர்கள் கொழுப்பு சத்து குறைந்த பாலை விரும்புவார்கள். அதற்காக கொழுப்புச்சத்து குறைக்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்று 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இது ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 16 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

3. வளரும் குழந்தைகள், குறிப்பாக கொழுப்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் அதிக கொழுப்பு உள்ள பாலை விரும்பினால் அவர்களுக்காக நிறை கொழுப்பு பால் 6% கொழுப்பு மற்றும் 9.0 % இதர சத்துக்கள் அடங்கிய பால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் லிட்டர் ஒன்று 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 14 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

4. ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட பாலை பொருத்தவரை பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது. இந்த கொழுப்பு இன்றைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேவையற்ற ஒன்றாகும்.

அதிலும் பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்டதிடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை எனவேதான் Aavin for Healthy TN என்ற அடிப்படையில் அதன் விற்பனையை மேலும் ஊக்குவிக்காமல், அதற்கு பதிலாக ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.

இந்த நடவடிக்கைகள் எதுவும் இலாப நோக்கிலோ அல்லது வியாபார உத்தியாகவோ கையாளப்படவில்லை, இன்றைய சூழலில் பசும்பாலின் தரம் எந்த விதத்திலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்களின் ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் முயற்சியாகும்”

என அமைச்சர் தெரிவித்துள்ளார்.