சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.732 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ. 15.34 கோடி செலவிலான கட்டடங்களை திறந்து வைத்தார். அதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பில் ரூ.1264.54 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. திருச்சி நவம்பட்டில் ரூ.59.57 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.02.2024) தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 15 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது “காக்கும் பணி, எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். மேலும், பேரிடர் காலங்களில் மக்களை மீட்டெடுக்கும் பணிகளையும் இத்துறை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கிய பணிகளை ஆற்றி வரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணிகள் சிறக்க கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.28.43 கோடி செலவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 168 குடியிருப்புகள், ரூ.23.10 கோடி செலவில் 16 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள், ரூ.2.45 கோடி செலவில் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்கள், என மொத்தம் ரூ.53.98 கோடி செலவிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக இன்று, திருவண்ணாமலை மாவட்டம் – சேத்துப்பட்டில் 2 கோடியே 51 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள்; கடலூரில் 4 கோடியே 43 இலடசம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடியில் 2 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள இரண்டு மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்; கரூர் மாவட்டம் – அரவக்குறிச்சியில் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவிலும், இராணிப்பேட்டை மாவட்டம் – இராணிப்பேட்டையில் 1 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம் – இராஜபாளையத்தில் 2 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவிலும், தென்காசி மாவட்டம் – சங்கரன்கோவிலில் 94 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள நான்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள்; என மொத்தம் 15 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா. விசுவநாதன், இ.கா.ப., தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் திரு. அபாஷ் குமார், இ.கா.ப., தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணை இயக்குநர் திருமதி மீனாட்சி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தெ. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுலவர்களும், கடலூர் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. அய்யப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., மேயர் திருமதி சுந்தரி ராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுலவர்களும் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் 63,000 சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 24.06.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, இத்திட்டப்பணிகள் குறுகிய காலத்திலேயே நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தினால் விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது தொலைநோக்குப் பார்வையில் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்ட டைடல் பூங்கா, தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட அடித்தளமாக அமைந்தது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்திட, முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில், 31 கோடி ரூபாய் செலவில், 63,000 சதுரஅடி பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன், குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு, மின்தூக்கிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு, கட்டட மேலாண்மை, மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை, 24×7 பாதுகாப்பு, உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இக்கட்டடத்தின் முதலாவது இடஒதுக்கீடு ஆணையை திருவாளர்கள் SUV Startup Space நிறுவனத்தின் திரு. எஸ். யுவராஜ் அவர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் திரு. வி. அருண் ராய், இ.ஆ.ப. டிட்கோ மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் டாக்டர். வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப, ஆகியோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமணன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.