
விக்டோரியா:
செஷல்ஸ் தீவில் ராணுவ தளம் அமைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து தென் மேற்கு திசையில், 3800 கி.மீ தொலைவில் ஆப்பிரிக்க கண்டத்தில் செஷல்ஸ் நாடு அமைந்துள்ளது. இதில், சிறிதும் பெரிதுமாக 115 தீவுகள் உள்ளன. இங்கிலாந்திடம் இருந்து 1976 ஜூலை 29 அன்று விடுதலை பெற்ற செஷல்ஸ், தற்போது ஆப்பிரிக்க யூனியனில் அங்கம் வகிக்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை 90,024 பேர் ஆகும்.
விக்டோரியா தலைநகராகக் கொண்ட இந்த நாட்டில், ஆட்சி மொழிகளாக : பிரெஞ்ச், ஆங்கிலம், செஷோலியஸ் ஆகியவை இருக்கின்றன. செஷோலியஸ் ருபி என்ற கரன்ஸி புழக்கத்தில் இருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 34 உறுப்பினர்களில் 25 பேர் மக்களால் நேரடியாகவும், மற்ற 9 பேர் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதத்தின்படியும் நியமிக்கப்படுவார்கள்.

செஷல்ஸ் நாட்டிற்கும் இந்தியாவுக்கும் நீண்ட நாட்களாக கலாச்சார மற்றும் ராணுவத்தொடர்பு உண்டு. இங்கு பல வருடங்களுக்கு முன்பே ரேடார் ஒன்றை இந்தியா நிறுவி உள்ளது.
ராஜீவ்காந்தி இந்திய பிரதமராக இருந்த நேரத்தில்,அந்நாட்டில் ராணுப்புரட்சி முயற்சி நடந்தபோது, இந்திய விமானப்படை சென்று புரட்சியை முறியடித்தது.
இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி – செஷல்ஸ் அதிபர் ஆலிக்ஸ் மைக்கேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
கடல்சார் மேம்பாடு, ராணுவ ஒத்துழைப்பு குறித்த நான்கு அம்சங்கள் ஒப்பந்தத்தில் இருந்தன.
அப்போது பிரதமர் மோடி, “இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக செஷல்ஸ் விளங்குகிறது. நம்முடைய (இந்தியா -செஷல்ஸின்) பாதுகாப்பு தொடர்பான உறவுகள் வலிமை மிக்கவை. நெருங்கிய நட்பு நாடு என்கிற அடிப்படையில், செஷல்சின் பாதுகாப்பு துறைகளை மேம்படுத்துவதற்கு, இந்தியா சிறப்பு கவனம் எடுக்கும். இதன் மூலமாக, அழகுமிக்க தீவுகளையும், அதனை சுற்றியுள்ள கடல் பகுதியையும் செஷல்ஸ் பாதுகாப்பதற்கு வழி ஏற்படும்.
இந்தியா மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு உட்பட, சர்வதேச விவகாரங்களில் ஆதரவு அளித்த வருவதற்காகவும் செஷல்சுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 3 மாதகாலம் இலவச விசாவை செஷல்ஸ் குடிமக்களுக்கு இந்தியா வழங்கும். அதேபோன்று, இந்தியா வந்த பின்னர் விசா வழங்கும் சலுகையையும் இந்தியா அளிக்கும்” என்று மோடி பேசினார்.

மேலும், ரேடார் மூலம் கடலோரங்களை கண்காணிக்கும் கூட்டு திட்டத்தை செஷல்ஸ் நாட்டில் தொடக்கி வைத்தார் மோடி.
அதோடு செஷல்ஸ் அதிபர் ஆலிக்ஸ் மைக்கேலுக்கு இந்தியா வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட மைக்கேல், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை தான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 34 ஆண்டுகளில் செஷல்ஸ் நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1981ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி செஷல்சுக்கு சென்றார்.
2015ம் ஆண்டைய ஒப்பந்தப்படி, செஷல்ஸின் தலைநகர் விக்டோரியாவில் இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 1,135 கி.மீ. தொலைவில் உள்ள தீவில் ராணுவ தளம் ஒன்றை அமைக்க இந்தியா முனைந்தது.
இதற்காக ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. . இதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் வேளையில் இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மேலும், இந்திய மேலாண்மையை எதிர்ப்பதாகக் கூறி போராட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தின. இதனால், இந்தியாவின் முயற்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
“இது இந்திய வெளியுறவுத்துறை கொள்கைக்குக் கிடைத்த தோல்வி” என உலக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கிய நேபாளம், கடந்த சில வருடங்களாக சீனாவுடன் நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]