பேரு வெச்சவன் சோறு வெக்காததது மாதிரி பரிதாபம் இது..

மாதிரி புகைப்படம்

“கைல சுத்தமா பத்து பைசா கிடையாது. சாப்பிட இருக்கிறதும் வயித்துக்கும், வாய்க்குமே பத்தாத கொடுமை.  சொந்த ஊருக்கே போயிடலாம்னு நினைச்சாலும் போக விட மாட்றாங்க. அரிசி, பருப்பு வாங்க கைல காசும் ஏதுமில்லாம குழந்தைகளையும் வெச்சுக்கிட்டு போராடிகிட்டு இருக்கோம்.  என்னா பண்றதுனே தெர்ல” என்கிறார் பெயிண்டர் மும்தாஜ் அலி கண்ணீருடன்.

இவரும் இவருடன், 30 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 500 பேர் வரை தகர ஷெட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், சென்னை பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் ரோட்டில்.  இவர்கள் அனைவரும், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பீகாரிலிருந்து கட்டிட மற்றும் பெயிண்ட்டிங் வேலைகளுக்காகக் கூலித்தொழிலாளர்களாக காண்ட்ராக்டர்களால் இரண்டு வருடங்களுக்கு முன்னால் அழைத்து வரப்பட்டவர்கள்.

“எங்கள கூட்டிட்டு வந்த காண்ட்ராக்டர் வாரம் ஒரு தடவை வந்து குடும்பத்துக்கு தலா 250 ரூவா குடுத்திட்டு போறாரு.  ஆனா நாலு பேரு இருக்கிற ஒரு குடும்பத்துக்கு இந்த பணம் எப்டி போதும்.  அதிலயும் எல்லாருக்கும் இந்த பணம் கிடைக்கிறதும் இல்ல” என்கிறார் சுகூர் என்பவர்.

மேலும் இவர், “இங்க எங்களை வந்து பார்த்த சில அரசு அதிகாரிகள்ட்ட ரேசன் பொருட்கள் கிடைக்க ஏதாவது ஏற்பாடு செய்ங்கனு கேட்டோம்.  உடனே பண்றதா சொல்லிட்டு போனாங்க.  ஆனா இதுவரை எதுவுமே கிடைக்கல…” என்கிறார் வருத்தத்துடன்.

இது ஒரு புறமென்றால், எலி மற்றும் கொசு தொல்லயால் மிகப்பெறும் அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர் இவர்கள்.  “குழந்தைகள் இதனால அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்டறாங்க.  முதல்ல கார்பரேசன்லருந்து வந்து அடிக்கடி கிளீன் பண்ணிட்டு போவாங்க.  இப்போ ஊரடங்குக்கு பிறகு அதையும் நிறுத்திட்டாங்க.  இதனால முடியாம போற குழந்தைகளுக்கு இங்க இருக்கிறது வெச்சு கை வைத்தியம் தான் பண்ண முடியுது.  கைல காசு இல்லாம ஹாஸ்பிடல் கூட கூட்டிட்டு போக முடியாம அவஸ்தை படுறோம்” என்கிறார் இன்னொருவர்.

இவர்களுக்கு மாஸ்க் போன்ற அடிப்படை பாதுகாப்புக்கான உபகரணங்கள் கூட இதுவரை அளிக்கப்படவில்லை என்பது மேலும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு இவர்களின் நியாயமான தேவைகளான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை இந்த அரசு நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே இவர்களின் ஒரே கோரிக்கை இப்போது.

–  லட்சுமி பிரியா